பாகிஸ்தானில் கொடூரம் : மனைவியை கொன்ற மூத்த பத்திரிகையாளரின் மகன் கைது! சாராவுக்கு நீதி வேண்டும்.

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட கனேடிய பெண் சாராவிற்கு நீதி கோரிய குரல்கள் தொடர்ந்து ஒலித்து வருகின்றன.

பாகிஸ்தானின் மூத்த ஊடகவியலாளரின் மகன் தனது கனேடிய மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

குறித்த நபர் வீட்டில் இருந்த டம்ப்பெல் மூலம் அடித்து கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொலையாளியின் மூன்றாவது மனைவியான 37 வயதான சாரா இனாம் என்ற கனேடிய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட நபர், பிரபல பத்திரிகையாளரும் முன்னாள் அரசியல்வாதியுமான அயாஸ் அமீரின் என்பவர் மகன் எனத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து இஸ்லாமாபாத் பொலிசார், சந்தேக நபரைக் கைதுசெய்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.

குளியலறையின் குளியல் தொட்டியில் பெண்ணின் சடலம் கிடந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சாட்சியங்களை சேகரிப்பதற்காக ஒரு தடயவியல் குழு குற்றம் நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதுடன், வீட்டில் ஒரு முழுமையான சோதனை நடத்தப்பட்டதாகவும், இதன்போது டம்ப்பெல் ஒன்றை மீட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பத்திரிகையாளர் அயாஸ் அமீர், “இதுபோன்ற சம்பவம் யாருக்கும் நடக்கக் கூடாது. இதுகுறித்து கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து நான் என்ன சொல்ல முடியும். இது எங்கள் இருதயத்தை நொருக்கும் விடயம்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து பொலிசார் தொடர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சாரா இனாமிற்கு நீதி கோரி பலரும் தமது குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles