பாகிஸ்தானில் வௌ்ளத்தில் சிக்கி 1033 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் நிலவும் கடும் மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி இதுவரை 1033 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் ஆரம்பமாகி, கடும் மழையுடனான வானிலை நிலவுகிறது.

30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாகிஸ்தானிலுள்ள பல பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பாகிஸ்தானில் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பலத்த மழையுடன் கூடிய வானிலை நீடிப்பதால் அமெரிக்கா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் உதவிகளை வழங்கிய போதிலும், மேலும் பல உதவிகள் தேவைப்படுவதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக துருக்கி தமது குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதாக அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலவும் அசாதாரண வானிலையால் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சர்  BBC-க்கு தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கம் தம்மால் இயன்றளவான உதவிகளை மக்களுக்கு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் இவ்வாறு வௌ்ளம் ஏற்படுகின்றமை மிக அரிது என்பதுடன், இம்முறை பெய்யும் பருவப்பெயர்ச்சி மழை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெய்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக சுமார் 33 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles