பாடசாலைகளில் இடைவிலகிய மலையக மாணவர்கள் தொடர்பாக ஆராய விசேட குழு

” மலையகத்தில் பாடசாலைகளில் இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்றுக் கொண்டு , அவர்களுக்கு என்ன நடந்தருக்கின்றது என்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சும்,  மாகாண கல்வி அமைச்சும் , பொலிசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்று (26.07.2021) நுவரெலியாவில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

” இன்று மலையகத்தில் இடைவிலகுகின்ற மாணவர்கள் தொடர்பாக எந்தவிதமான தகவல்களும் இல்லை. அவ்வாறான அநேகமானவர்களே வீட்டு வேலைக்காக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். எனவே இந்த இடைவிலகல் தொடர்பாக கல்வி அமைச்சு மாகாண கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்கள் பொலிசார் கிராம உத்தியோகஸ்தர்கள் சமுர்த்தி அதிகாரிகள் ஊடாக தகவல்களை பெற்றுக் கொண்டு அவர்களின் நிலைமை தொடர்பாக ஆராய வேண்டிய ஒரு நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமே அண்மையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சம்பவம்.இதற்கு காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.வெறுமனே தரகர்களையும் ஏனையவர்களையும் மாத்திரம் குற்றம் சுமத்துவதால் இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாது.

அதே நேரத்தில் இன்று 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீடு வேலைகளுக்கு அமர்த்தப்படுகின்ற பொழுதிலும் அவர்களுடைய விபரங்கள் எங்கும் பதிவிற்கு உட்படுத்தப்படவில்லை.இவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கான எந்தவிதமான நடைமுறையும் இல்லை.

எனவே எதிர்காலத்தில் வீட்டுப் பணிப்பெண்கள் தொடர்பாக முறையான தகவல்கல் திரட்டப்பட்டு அவர்களுடைய நலன்கள் தொழில் செய்கின்ற இடத்தில் அவர்களுக்கான பாதுகாப்பு அவர்களுக்கான முறையான சம்பளம் உட்பட பல விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டிள்ளது.

மேலும் இன்று இலங்கையில் வீட்டுப் பணிக்கான தொழிலாளர்கள் அங்கீகரிக்கப்படாமல் இருக்கின்றார்கள்.அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்து அவர்களுக்கான ஒரு பாதுகாப்பை ஏற்படுத்துவதுடன் இதனை ஒர கௌரவமான தொழிலாளகவும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் இலங்கையில் செயற்படுகின்ற தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தொழில் அமைச்சு என்பன முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே இந்த இடைவிலகல் தொடர்பாக தான் உடனடியாக மத்திய மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும்.

இதுவரையில் வீட்டு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளவர்களின் விபரங்களை உடனடியாக பிரதேச செயலாளர்கள் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு பிரதேச செயலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளதுடன்.இதனை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவும் தானும் இதனை ஏற்றுக் கொள்வதாகவும் இது தொடர்பாக பிரதேச செயலாளர்கள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

Related Articles

Latest Articles