வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு தொலைக்காட்சி களவாடப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினர் முறைப்பாடுசெய்து 8 மணி நேரத்துக்குள் கைது செய்துள்ளனர்.
பாடசாலையில் இடம்பெற்ற இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் நேற்றுமுன்தினம் காலை 10 மணியளவில் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் உப பொலிஸ் பரிசோதகர் அகமட் தலமையில் பொலிஸ் சார்ஜன்க ளான திசாநாயக்க, ஜெயவர்த்தன, திலீப் மற்றும் பொலிஸ் கொஸ்தாபிள்களான உபாலி, தயாளன், ரணில் ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரினால் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
பாடசாலைக்கு அருகேயுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. காணொளிகளையும் பொலிஸார் பரிசோதனைக்குட்படுத்தினர். இதன்போது கடந்த வெள் ளிக்கிழமை (12) மதியம் 3.29 மணியளவில் ஒருவர் தொலைக்காட்சியைத் தூக்கிக் செல்வது சி.சி.ரி.வியில் பதிவாகியிருந்தது.
சி.சி.ரி.வி. காட்சியின் உதவியுடன் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த சமயத்தில் இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் குறித்த தொலைக்காட்சியை விற்பனைக்கு வழங்கியமை தெரியவந்ததையடுத்து, சுமார் 8 மணி நேரத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுட்ட நபரைப்பொலிஸார் கைது செய்தனர்.
வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
