பாடசாலை வேன்மீது முறிந்து விழுந்த மரம்: கண்டியில் ஐவர் காயம்

கண்டி, திகன பிரதான வீதியின் கென்கல்ல பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்து இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 6 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைவிடப்பட்ட காணி ஒன்றில் உக்கிய நிலையில் இருந்த மரமொன்றே இவ்வாறு வீழ்ந்துள்ளது.

இதன்போது திகன பகுதியிலிருந்து கண்டி நோக்கி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மரம் முறிந்து வீழ்வதை அவதானித்த சாரதி, வேனை கட்டுப்படுத்த முயற்சித்த நிலையில், வேன் கட்டுப்பாட்டை இழந்து சுவர் மற்றும் தூண் ஒன்றில் மோதுண்டுள்ளது.

இந்த விபத்தில் மூன்று மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட 6 பேர் பயணித்த நிலையில், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles