பாலஸ்தீன ஆதரவு போராட்டம்: அமெரிக்காவில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது!

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தொடர்பில் இதுவரை 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களிலும் இப்போராட்டம் தொடர்கின்றது.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பொதுவெளியில் நடந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து, கல்வி நிறுவனங்களுக்கும் பரவி உள்ளன.

இதனால் பிரபல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போராட்டக்களமாக மாறி உள்ளன.காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், இஸ்ரேலுக்கான அமெரிக்க இராணுவ உதவியை நிறுத்த வேண்டும் எனவும், போரினால் பலனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் போராட்டத்தில்ஈடுபடும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின்போது 100-இற்கு மேற்பட்ட மாணவர்களை பொலிஸார் கைது செய்தனர், இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள கல்வி நிலையங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். போராட்டத்தை தடுக்க பல்கலைக்கழகங்களில் கலவர தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா முழுவதும் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரத்தை ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு கையாளும் விதம் அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அங்குள்ள தனியார் செய்தி நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் பாலஸ்தீன முகாம் அமைக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

Related Articles

Latest Articles