பாவனையாளர்களின் தகவல்களை பாதுகாக்காமல் விளம்பர நிறுவனங்களுக்கு விற்றதாக டுவிட்டர் நிறுவனம் மீதான வழக்கில், அந்நிறுவனத்திற்கு 1,165 கோடி ரூபா (இந்திய பெறுமதி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
230 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களை கொண்டிருக்கும் சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், லாகின் வசதி பாதுகாப்புக்காகவும் பயனர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியை சேமித்து வைக்கும் என தொடக்கத்தில் அறிவித்திருந்தது.
ஆனால் பாவனையாளர்களின் தனிப்பட்ட விபரங்களை விளம்பர நிறுவனங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ட்விட்டர் கைமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்த வழக்கை கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றம் விசாரித்தது.
அப்போது ட்விட்டருக்கு எதிராக வாதாடிய பெடரல் டிரேட் ஆணைக்குழு, ‛ட்விட்டரை நம்பி வந்த பயனர்களின் தரவுகளை அவர்களுக்கு தெரியாமல் விளம்பர நிறுவனங்களுக்கு விற்றது தவறு. இந்த வியாபாரத்தால் ட்விட்டர் பல மடங்கு இலாபத்தை பெற்றுள்ளதாக’ வாதாடியது. இதனையடுத்து, பயனர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்தியதற்காக, 150 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.1165 கோடி) அபராதமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அபராத தொகையை செலுத்த ட்விட்டர் நிறுவனமும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
