‘பாவம் கம்மன்பில – விலை உயர்வு பஸிலுக்கு தெரியும்’ – லால்காந்த

ராஜபக்ச குடும்பத்தின் திட்டங்களையே தற்போதைய அமைச்சரவை செயற்படுத்துகின்றது. மாறாக சுயாதீனமாக இயங்கக்கூடிய அமைச்சரொருவர் இந்த நாட்டில் இல்லை. அவர்களால் சுயாதீனமாக அமைச்சரவை பத்திரமொன்றைக்கூட முன்வைக்க முடியாது – என்று ஜே.வி.பி. உறுப்பினர் கே.டி. லால்காந்த சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ பஸில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்திருந்தாலும் அவருக்கும் தெரியப்படுத்திவிட்டே எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்பம் எடுத்த முடிவுதான் இது. பாவம் அமைச்சர் கம்மன்பில, அவர்மீது தற்போது பழிசுமத்தப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் என்ற வகையில் கம்மன்பிலவால் தனியாக எரிபொருட்களின் விலையை அதிகரிக்க முடியுமா, அவ்வாறு சுயாதீனமாக அமைச்சர்கள் செயற்படக்கூடிய சூழ்நிலை இங்கு இருக்கின்றதா? தனது அமைச்சுசார் விடயம் தொடர்பில் அமைச்சரொருவருக்கு சுயாதீனமாக பத்திரமொன்றை முன்வைப்பதற்கான சுதந்திரம் இந்த அமைச்சரவையில் உள்ளதா? அவ்வாறு இல்லை.

ராஜபக்ச குடும்பத்தினர் கலந்துரையாடி எடுக்கும் தீர்மானங்களுக்கு கையொப்பமிட்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பத்திரத்தை அமைச்சரவையில் முன்வைக்கும் அதிகாரம் மட்டுமே அமைச்சர்களுக்கு உள்ளது. இந்நிலையில் கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளமை தவறு. ஏனெனில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்கும் முடிவை எடுத்தது ராஜபக்ச குடும்பம்.

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் நல்லமே நடக்கும் என உத்தரவாதம் வழங்கினர். ஆனால் என்ன நடக்கின்றது? கொரோனாவை இவர்களே உருவாக்கினர். நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கியது யார்? கொரோனா இருந்தால்தான் ஏனையப் பிரச்சினைகளை ஆட்சியாளர்களால் மறைக்க முடிகின்றது.

தனது இயலாமையை மூடிமறைக்க மக்களை ஒடுக்குகின்றனர். எனவே, இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்காக அனைவரும் அணிதிரள வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles