பிரதேச சபைத் தலைவர்களாக இரண்டு தமிழர்கள் : ஊவாவில் வலுப்பெரும் தமிழர் அரசியல்

பிரதேச மட்டத்திலான அரசியல் மற்றும் நிர்வாகப் பொறிமுறையின்போது பிரதேச சபைகளே முக்கிய நிறுவனமாக திகழ்கின்றது. அத்தகையதொரு கட்டமைப்பில் உயர் பதவியை தமிழரொருவர் வகிப்பதென்பது பிரதேச மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைக்கும் கௌரவமாகவே கருதவேண்டும்.

எனவே, அத்தகையதொரு சூழ்நிலை உதயமாக களம் அமைத்துக்கொடுத்த தேசிய மட்டத்திலான அரசியல் தலைமைத்துவத்தையும்   நிச்சயம் பாராட்டி – வாழ்த்துகூறியே ஆகவேண்டும்.

பதுளை மாவட்ட மக்கள் உட்பட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு சிறப்பானதொரு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிவரும் செந்தில் தொண்டமானின் சாணக்கியத்தாலேயே இன்று ஹல்துமுல்ல பிரதேச சபையில் தவிசாளர் பதவியை தமிழர் ஒருவர் அலங்கரிக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள சகோதரர்கள் பெரும்பான்மையாக வாழும் இப்பகுதியில் தமிழர் ஒருவருக்கு உயர் பதவி கிடைத்தமையானது ‘அரசியல் ரீதியில் வென்றெடுக்கப்பட்ட உரிமை’யாகவே பார்க்கப்படுகின்றது.

பதுளை மாவட்டத்தை பொறுத்தமட்டில் உள்ளாட்சி மன்றங்களில் உப தலைவர் என்ற பதவிநிலை அந்தஸ்த்து மாத்திரமே தமிழர்களுக்கு கிடைத்துவந்தது. தலைவராகுவதற்கான வாய்ப்பு இருந்தும் அந்த இலக்கை அடைவதற்கான அரசியல் சூழ்நிலை இருக்கவில்லை. இதனை செந்தில் தொண்டமான் தகர்த்தெறிந்துள்ளார். அவரின் வழிநடத்தலுடன் பதுளையில் இதுவரை இரண்டு சபைகளில் தமிழர்கள் தவிசாளர் பதவிகளைப் பெற்றுள்ளனர்.

ஹப்புத்தளை பிரதேச சபைக்கு தலைவராக தமிழர் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது ஹல்துமுல்ல பிரதேச சபையிலும் தமிழர் ஒருவர் பதவிக்கு வந்துள்ளார்.பதுளை அரசியல் வரலாற்றில் தமிழர்கள் இருவர் தவிசாளர் பதவியை வகிப்பதும் இதுவே முதன்முறையாகும். அதுமட்டுமல்ல முக்கியதொரு அரசியல் திருப்பமாகவும் இது பார்க்கப்படுகின்றது.

இன்று தமிழர்களுக்கு உரிய இடம் கிடைப்பதற்கு செந்தில் தொண்டமானின் சிறப்பான அரசியல் பயணம் மற்றும் தலைமைத்துவமே பிரதான காரணமாகும்.

அதேவேளை, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது பேரம் பேசும் சக்தியை இழந்துவிட்டதாக பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவ்வாறு அல்ல. பேசும் சக்தி இன்னும் இருக்கின்றது, அது தொடரும் என்பதனை செந்தில் தொண்டமானின் நகர்வுகள் நல்லதொரு உதாரணமாக நிருபிக்கப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்தில் எடுக்கபடும் முடிவுகள் வெற்றிபெறுவதற்கு பிரதேச சபைகளின் பங்களிப்பு மிக அவசியம். அத்தகைய சபைகளில் உரிமைகளை வென்றெடுப்பதென்பது அரசியல் திருப்பமாகவே கருதப்படுகின்றது.

– பதுளை அசோக்குமார்

Paid Ad