கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட கடியண்லேன கணேஷா தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி பிரதேச மக்களும் பெற்றோர்களும் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
தரம் 1 தொடக்கம் தரம் 11 வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் இப்பாடசாலையில், 147 மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், வெறும் 8 ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில், நாவலப்பிட்டி – கடியண்லேன நகர பிரதான வீதியிலிருந்து பாடசாலை வரையிலான வீதி வழியாகப் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு அமைதிப் பேரணியாக வந்தனர்.
தொடர்ந்து பாடசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட அவர்கள், தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் கல்வித் தரத்தை மேம்படுத்த உடனடியாக வலயக் கல்வி அதிகாரிகள் தலையிட்டு, தகுந்த தீர்வை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவசரமாக வலியுறுத்தியுள்ளனர்.
க.யோகா
