உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்சின் அதிரடி தாக்குதலை சமாளிக்கும் உத்வேகத்துடன் அரைஇறுதியில் மொராக்கோ இன்று களம் இறங்குகிறது.
22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் இன்றிரவு (புதன்கிழமை 12.30 ) அல்பேத் ஸ்டேடியத்தில் நடக்கும் 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொள்கிறது.
நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வரும் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் பிரான்ஸ் அணி லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் முதலிடம் பிடித்தது.
2-வது ரவுண்டில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தையும், கால்இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும் பதம் பார்த்து அரைஇறுதியை எட்டியிருக்கிறது.
பிரேசில் வெளியேறிய நிலையில் இப்போது அனைவரது கவனமும் பிரான்ஸ் பக்கம் திரும்பியிருக்கிறது. அதுவே அவர்களுக்கு கூடுதல் நெருக்கடியாக இருக்கும். 1962-ம் ஆண்டுக்கு பிறகு கோப்பையை தக்க வைக்கும் முதல் அணி என்ற மகத்தான சாதனையை நோக்கி பயணிக்கும் பிரான்ஸ் அணிக்கு கிலியன் எம்பாப்பே (5 கோல்), ஒலிவியர் ஜிரூட் (4 கோல்), கோல் வாய்ப்புகளை உருவாக்கும் கிரீஸ்மான் ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்கள். களத்தில் மின்னல் வேகத்தில் ஓடும் இவர்கள் சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் பந்தை வலைக்குள் தள்ளிவிடுவதில் கில்லாடிகள். கேப்டனும், கோல் கீப்பருமான ஹூகோ லோரிசும் அணியின் கட்டமைப்புக்கு பக்கபலமாக இருக்கிறார்.
மொராக்கோ அரைஇறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சரித்திர சிறப்பும் உண்டு. கோல் வழங்காத மொராக்கோ லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடம் பெற்ற மொராக்கோ 2-வது சுற்றில் கோல் ஏதும் போடாத நிலையில் பெனால்டி ஷூட்-அவுட்டில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை சாய்த்தது. மொராக்கோ கோல் கீப்பர் யாசின் போனோ ஸ்பெயினின் ஷாட்டுகளை எல்லாம் முறியடித்து ஹீரோவாக பிரகாசித்தார். தொடர்ந்து கால்இறுதியில் ஒரே கோலில் போர்ச்சுகலின் கனவை சிதைத்தது.










