” எனக்கு திறமை, தகைமை இருப்பதால்தான் பீல்ட்மார்ஷல் பதவி வழங்கப்பட்டது. பீல்ட்மார்ஷல் பதவி என்பது மைத்திரிபால சிறிசேனவின் சொத்து அல்ல” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேனா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சரத் பொன்சேனா எம்.பி., பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வெளிசேகர வெளியிட்டிருந்த கருத்துகளுக்கு பதிலடி கொடுத்தார்.
” எனது குணம் பற்றி தெரிந்ததால்தான் நல்லாட்சியின்போது சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவி எனக்கு வழங்கப்படவில்லை என சரத் வீரசேகர கூறினார். அது உண்மைதான். ஏனெனில் எனக்கு அந்த பதவி வழங்கப்பட்டிருந்தால் தவறிழைத்தவர்களை தப்பிக்க விட்டிருக்கமாட்டேன்.
சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவியை வழங்கினால், பொன்சேகா தன்னைதான் முதலில் கைது செய்வார் என மைத்திரிபால சிறிசேன ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் அன்று அச்சம் வெளியிட்டிருந்தார். எனவே, பதவி தொடர்பில் நான் அலட்டிக்கொள்ளவில்லை.” -என்றார்.
இதன்போது குறுக்கீடு செய்த சாந்த பண்டார எம்.பி., ” மைத்திரிபால சிறிசேனதான் உங்களுக்கு பீல்ட்மார்ஷல் பட்டத்தை வழங்கினார். அந்த நன்றிகூட உங்களுக்கு இல்லையா” என கேட்டார்.
இதற்கு பதிலளித்த அவர், ஜனாதிபதி பதவியை வகித்த நபர், எனக்கு தகைமை இருந்ததால் அதனை வழங்கினார். பீல்ட்மார்ஷல் பட்டம் என்பது மைத்திரியின் பொலன்னறுவையில் உள்ள சொத்து அல்ல.” – என்றார்.