புதிய அரசமைப்பை நாம் உருவாக்கியே தீருவோம்!

தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குறுதிக்கமைய புதிய அரசமைப்பை உருவாக்குவோம் என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

” வரவு – செலவுத் திட்டத்தில் புதிய அரசமைப்பு தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படும் வரை அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் எவ்வித மாற்றமும் இல்லாத வகையில் செயற்படுத்தப்படும். சிறந்த வாய்ப்பு கிடைக்கப் பெறும் முதல் சந்தர்ப்பத்தில் பொதுமக்களின் அபிப்ராயங்களுக்கும், நாடாளுமன்ற ஆலோசனைக்கும் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டு புதிய அரசமைப்பை உருவாக்குவோம். அதற்குத் தயாராகவே உள்ளோம்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு முன்னர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் புதிய அரசமைப்பைச் சிறந்த முறையில் இயற்ற முடியும். ஆகவே, தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைய புதிய அரசமைப்பை உருவாக்குவோம். .” – என்றார்.

Related Articles

Latest Articles