இலங்கையில் மாகாணசபை முறையையும், அதிகாரப்பகிர்வு பொறிமுறையும் தோல்விகண்டுள்ளன. சமஷ்டி கட்டமைப்பையும் ஏற்கமுடியோது. எனவே, அனைத்து இன மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய புதியதொரு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரும், முன்னாள் எம்.பியுமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கையில் சமஷ்டி பொறிமுறை அமுலுக்கு வருவதை ஜே.வி.பி. விரும்புகின்றதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” இலங்கையை சமஷ்டி கட்டமைப்புடைய நாடாக மாற்றுவதற்கு நாம் என்றும் எதிர்ப்பு என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றேன். கடந்த ஆட்சியின்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவில்லை. அதற்கான யோசனைகளே முன்வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு முன்வைக்கப்பட்ட எந்தவொரு யோசனையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்கும் வகையிலேயே புதிய அரசியலமைப்பொன்றே அவசியம் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். இதன்போது 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்ந்தும் தேவையான என மக்களிடம் கருத்துகோர வேண்டும்.ஏனெனில் மக்கள் ஆணையின்றியே 13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
புதிய அரசியலமைப்பில் நாட்டின் ஒருமைப்பாடு, அனைத்து மக்களினதும் உரிமைகள் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதுடன், நவீன யுகத்துக்கேற்ற வகையிலான சரத்துகளும் உள்வாங்கப்படவேண்டும். ராஜபக்ச அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அன்று இருந்தது. ஆனால், புதிய அரசியலமைப்பை இயற்றவில்லை. 18 ஆவது திருத்தச்சட்டமே கொண்டுவரப்பட்டது.
அதேவேளை, அதிகாரப்பகிர்வு நடைமுறை தோல்விகண்டுள்ளது. மாகாணசபைகளும் முறையாக இயங்கவில்லை. எனவே, அனைத்து இன மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தக்கூடிய புதிய அரசியலமைப்பு வேண்டும். – என்றார்.