நாட்டில் தற்போதுள்ள தோல்விகண்ட அரசியல் முறைமையை மாற்றி, புதியதொரு அரசியல் சக்தியை கட்டியெழுப்பும் நோக்கில், புதிய சுதந்திர போராட்டம் எனும் பெயரில் – பௌத்த பிக்குகள் இணைந்து சங்க சம்மேளன கூட்டத்தை நடத்தவுள்ளனர்.
மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வண. வலவாஹெங்குனவெவே தம்மரதன நாயக்க தேரர் தலைமையில் நாளை (14) மிகிந்தலை விகாரையில் குறித்த கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இதில் தமிழ் மக்களும் இணைய வேண்டும் என்று மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வண. வலவாஹெங்குனவெவே தம்மரதன நாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி பதவியை வகித்த இருவர் இந்த நாடாளுமன்றத்தில் உள்ளனர், ஜனாதிபதி உட்பட 226 பேரால் இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாமல்போயுள்ளது . ஆட்சியை கைவிடும் நிலையிலும் அவர்கள் இல்லை, சில குடும்பங்கள்தான் இந்நாட்டை ஆட்சிசெய்துள்ளன. குடும்ப நலனுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன.
எனவேதான் இன, மத, குல, கட்சி பேதமின்றி புதியதொரு பயணத்தை மேற்கொள்ள அனைவரையும் நாம் அழைக்கின்றோம். 1948 இல் எமக்கு சுதந்திரம் கிடைத்தாலும் தற்போது சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமைகூட இல்லை. தீவிரவாத குழுவொன்றுதான் இந்நாட்டை ஆள்கின்றதுபோதும், பாதாள குழுக்களின் சமூகவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அரச திணைக்களங்களின் செயற்பாடுகளும் திருப்தியாக இல்லை. ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடுகின்றன.
இந்நிலைமை தொடர இடமளிக்ககூடாது, புதிய அரசியல் பயணத்தில் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளவும் கூடாது. தற்போதுள்ள எந்தவொரு கட்சியிடமும் நாம் சோரம்போனதும் கிடையாது, எனவே, அனைத்து இன மக்களும் புதிய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
பிக்குகள் மற்றும் மக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதை தடுப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்படுகின்றனர். அரச அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இவர்களில் ஏமாற்று கதைகளை நம்ப வேண்டாம். மிகிந்தலை விகாரைக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் பல எமக்கு உதவ முன்வந்துள்ளன. எனவே, எமது அரசியல் பயணம் எவ்வாறு அமையும் என்பது குறித்து விளக்கமளிக்கப்படும். நாளை மறுதினம் (நாளை) சங்க சம்மேளன கூட்டம் முடிவடைந்த பின்னர், மாவட்டந்தோறும் குறித்த கூட்டங்கள் நடத்தப்படும். ஜனாதிபதி, பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டால் அதில் நிச்சயம் களமிறங்குவோம். கறுப்பு பட்டியலில் இல்லாதவர்கள் எம்முடன் இணையலாம்.” – என்றார்.
