நாட்டில் பேரனர்த்தம் ஏற்பட்டதால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
“ 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். வாகன இறக்குமதி தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடுவோம்.
கடந்த வரவு- செலவுத் திட்டத்திலும் 50 சதவீதமான முன்மொழிவுகள் நிறைவேற்றப்படவில்லை. தற்போது அவ்வாறு செய்ய முடியாது. பாதிக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் கட்டியெழுப்படவேண்டும். மக்களின்; வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு துரிதமாக செயல்பட வேண்டும்.
அரசாங்க அதிகாரிகள்மீது அரசாங்கம் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்களுக்கு அதிகாரம் மற்றும் சுதந்திரம் வழங்க வேண்டும். அப்போதுதான் பொறிமுறை கிராம மட்டங்களுக்கு செல்லும்.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டில் பல இழப்புகள் ஏற்பட்டுவிட்டதால் புதிய வரவு- செலவுத்திட்டமே முன்வைக்கப்பட வேண்டும். இதுவரையில் இடைக்கால நிதி அறிக்கையை முன்வைத்துஅனுமதியை பெற்றுக்கொள்ளலாம் என ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசனை வழங்கியுள்ளது.










