கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன்று சென்னைக்கு 1500 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும் சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் பகுதி வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மீட்பு, நிவாரணப் பணிகளை கண்காணிக்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
`மிச்சாங்’ புயல் வட தமிழக கடலோரப் பகுதியான சென்னையை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளைந்து கடந்து சென்றதால்,அதன் வேகம் குறைந்து, வெகு நேரம் சென்னைக்கு அருகில் மழை மேகங்களுடன் பயணித்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை இடைவிடாமல் மழை கொட்டியது.
சென்னையில் பெய்த மழை காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளக்காடானது. திரும்பிய திசையெல்லாம் மழைநீர் தேங்கியதை பார்க்க முடிந்தது. தெருக்கள் தோறும் முழங்கால் முதல் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. மழை ஒரு பக்கம், கடல் சீற்றம், காற்று மறுபக்கம் என சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மிச்சாங் புயல் பந்தாடியது. புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்திருந்தது.