மியன்மார் மற்றும் தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது.
மியன்மாரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து நாட்டிலும் நிலநடுக்கத்தால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் மோனிவா நகருக்கு அருகே நேற் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடத்தில் அங்கு 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது.
அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், மியான்மரின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள் இடிந்து விழுந்தன. இங்குள்ள பழமையான அரண்மனையும் இடிந்து விழுந்தது.
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள தாய்லாந்து, மலேசியா, பங்களாதேஷ், லாவோஸ், சீனா மட்டுமின்றி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதை அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் புவியியல் ஆய்வு அமைப்புகள் உறுதி செய்தன.
மியன்மாரில் நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட 6 பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்படுவதால் பலி எண்ணிக்கை 1000-ஐ கூட தாண்டலாம் என அச்சம் எழுந்துள்ளது.










