சாமியார்போல வேடமிட்டு, இரு பெண்கள் தனிமையில் வசித்த வீட்டில் நகை மற்றும் கையடக்கத் தொலைபேசி கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை பரகொல்ல பகுதியில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண்களிடம் முகநூல் வாயிலாக தான் மந்திரவாதி என அடையாளப்படுத்திக் கொண்டு நட்பை ஏற்படுத்தி பின் தங்களின் வீட்டுக்கு பூசை செய்ய வேண்டும் என கூறி பசறை பகுதிக்கு வந்து பூசைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட குறித்த போலிச் சாமியார் குறித்த பெண்கள் அணிந்திருந்த நகைகள் பூசை செய்வதற்கு தடை என்றும் நகைகளை கழற்றி வைத்திவிட்டு வருமாறு கூறியுள்ளார்.
பின் தன் கையில் அணிந்திருந்த வெள்ளி மோதிரத்தையும் கழற்றி வைத்த போலி மந்திரவாதி பூசை செய்வதற்கு மேலும் ஒரு முக்கியமான பொருள் வேண்டும் என்றும், அது பசறை பகுதியில் இல்லை பதுளையிலேயே இருப்பதாகவும் கூறி தான் சென்று வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்ற நபர் மாலையாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமுற்ற பெண்கள் தாங்கள் கழற்றி வைத்த தங்க நகைகளும் கையடக்கத் தொலைபேசியும் குறித்த நபரால் திருடி செல்லப்பட்டுள்ளமையை அவதானித்துள்ளனர்.
இதன்பின் உடன் பசறை பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பதுளை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல பதுளை பிரதி பொலிஸ் அத்தியட்சகர் திலிப் த சில்வா ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
E.M. பியரத்னவின் வழிநடத்தலில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி R.M.S.G.ரத்னாயக்க தலைமையிலான 39315 சாஜன் நிரஞ்சன்,63711 சமன் பாலித , 68558 சமில் , ஆகிய பொலிஸ் குழுவினர் விரைந்து விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த சந்தேக நபர் திருகோணமலையில் விடுதி ஒன்றில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் திருகோணமலையில் சந்தேக நபர் மறைந்திருந்த விடுதிக்குச் சென்று சந்தேக நபரை நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
இதன்போது விற்கப்பட்டிருந்த நிலையில் கையடக்கத் தொலைபேசி மீட்கப்பட்டதோடு 3 லட்சத்துக்கும் அதிக பெறுமதியான விற்பனை செய்த நிலையில் தங்க நகைகளும் மீட்கப்பட்டன.
குறித்த சந்தேக நபர் 31 வயதுடைய சேவிஸ் வீதி ஆரால் நகர் ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன் குறித்த நபர் சுமார் ஒன்றரை வருட காலமாக அநுராதபுரம் , கொழும்பு, திருகோணமலை மேலும் பல பகுதிகளில் தனது மனைவியுடன் விடுதிகளிலேயே வாழ்ந்து வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் மேலும் பல குற்றங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என பல கோணங்களிலும் பசறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜ்










