கம்பளை உட்பட பல பகுதிகளில் திட்டமிட்ட அடிப்படையில் பெண்களை ஏமாற்றி மோசடியான முறையில் பொருட்களை விற்பனைசெய்துவந்த மூவரை வெலம்பொட பொலிஸார் நேற்றிரவு (18.10.2020) கைது செய்துள்ளனர்.
வேனொன்றும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ‘அயன் பொக்ஸ்’, ‘ரைஸ் குக்கர்’ உள்ளிட்ட மின்சாதன உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறைந்த விலையிலான பொருட்களை, உத்தரவாதம் உள்ளது, சிறந்த பண்டம் என்றெல்லாம் கூறி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர் என கேகாலை மற்றும் வெலம்பொட பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சுமார் 9 ஆயிரம் ரூபா மதிப்புள்ள பொருள்கூட 30 ஆயிரம் ரூபாவுக்குமேல் மோசடியான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்தே அவர்கள் வெலம்பொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கேகாலை உட்பட மேலும் சில பகுதிகளில் இவர்கள் இவ்வாறு மோசடியான முறையில் பொருட்கள் விற்பனை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.