பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போது, அது போதாது என்றும் 2000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் அன்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தொழிற்சங்கம் கூறியது. ஆனால் இன்று பெருந்தோட்ட மக்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதால் 1750 ரூபாவைக் கூட பெற்றுக் கொடுக்காமல் அரசாங்கம் அவர்களை பழி வாங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பெருந்தோட்ட மக்கள் சகல தேர்தல்களிலும் எமக்கு ஆதரவளித்திருக்கின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மலையக தமிழ் மக்களும், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களித்திருந்தனர். கடந்த காலங்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்திய போது, ஜே.வி.பி. தொழிற்சங்கம் 2000 ரூபா வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டது.
ஆனால் தற்போது ஜே.வி.பி. ஆட்சியமைத்துள்ள நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளமும் இல்லை, தொழிலும் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சஜித் பிரேதாசவுக்கு வாக்களித்தமையால் அரசாங்கம் அவர்களை பழி வாங்குவதற்காகவே இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கிறதுர்.
இலங்கையில் அமெரிக்க முதலீடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மீது நம்பிக்கையின்மையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை சிறையிலடைத்து அதில் திருப்தியடைவது மாத்திரமே அரசாங்கத்தின் இலக்காகவுள்ளது. எதிர்க்கட்சிகள் மீதான அரசியல் பழிவாங்கல்களுக்கு அப்பால் கடந்த ஓராண்;டு காலமாக எந்தவொரு அபிவிருத்தியும் நாட்டில் இடம்பெறவில்லை.
பெருந்தோட்டத் துறை உள்ளிட்ட எந்தவொரு விவசாயத்திலும் உற்பத்திகள் அதிகரிக்கப்படவில்லை. இதனால் பயிர் செய்கையாளர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசாங்கத்தால் அவர்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. முற்றுமுழுதாக தமது வாக்குகளை ஜே.வி.பி.க்கு வழங்கிய அரச உத்தியோகத்தர்களும் இன்று கைவிடப்பட்டு வீதிக்கிறங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஊழல் ஒழிப்பு எனக் கூறும் அரசாங்கம் இதுவரையில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரதூரமான மோடிகள் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக சில்லறை கொள்ளைகளில் ஈடுபட்டோர் மாத்திரமே கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஐ.தே.க. சம்மேளனத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்குபற்றியதை அவதானித்த அரசாங்கம், அதை கள்வர்களின் கூடாரம் என விமர்சித்தது.
ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள்ளும் கள்வர்கள் இருக்கின்றனர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உண்ண உணவு இல்லை, உடுத்த ஆடையில்லை என பஞ்சம் பாடியவர்கள் இன்று பல கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர்களாகவுள்ளமை எவ்வாறு? இதுதான் ஜே.வி.பி.யின் கொள்கையா? 2020இல் ஆட்சியமைத்தவர்கள் இரண்டு ஆண்டுகளிலேயே ஆட்சியைக் கைவிட்டுச் செல்லும் நிலைமை ஏற்பட்டது. அதேபோன்று வெகுவிரைவில் இவர்களும் ஆட்சியை கைவிட்டுச் செல்ல வேண்டியேற்படுமா என்ற சந்தேகம் தற்போது வலுப்பெற்றுள்ளது என்றார்.