‘பெருந்தோட்டப் பகுதிகளில் 13.1 வீதமான பிள்ளைகள் பாடசாலை செல்வதில்லை’ – வெளியான அதிர்ச்சித் தகவல்

எமது நாட்டில் பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி, இலவசப் பாடநூல் வழங்கப்படுகின்றன. வறிய மாணவர் கற்கும் பாடசாலைகளில் போசாக்கான காலை உணவு வழங்கப்படுகிறது. கஷ்டப் பிரதேச மாணவர்களுக்கான பாதணிகள் குறைந்த விலையில் வழங்கப்படும் வாய்ப்பும் உள்ளது. மாணவர்களுக்கான பிரயாண பருவச்சீட்டும் கிடைக்கின்றது.

 

இலங்கையை எடுத்து நோக்கும் போது தேசிய கல்வி முறையில் புதிய கல்விச் சிந்தனையின் தாக்கம் பல புதிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள துணை நிற்கின்றது. இதன் மூலம் இலங்கையின் எழுத்தறிவு வீதம் 97.3 வீதமாக உயர்ந்து காணப்படுகின்றது.

இவ்வாறு கல்வியில் தேசியரீதியில் தேறிய நிலை காணப்பட்டாலும் மலையகத்தைப் பொறுத்தவரையில் கல்வி ரீதியான முன்னேற்றம் என்பது மிகக் குறைவாக காணப்படுகின்றது. அத்துடன் கல்வியில் சமவாய்புக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பல முயற்சிகள் மலையக மக்களை சரியாக எட்டவில்லை. இதனால் மலையக எழுத்தறிவு 58.5 வீதமாக உள்ளதுடன் மாணவர் பாடசாலைகளில் சேரும் வீதம், பல்கலைகழக அனுமதி போன்றவற்றில் பின்தங்கி உள்ளது. அத்துடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் 13.1 சதவீதமான பிள்ளைகள் பாடசாலை செல்லாதவர்களாக உள்ளனர். மலையக கல்வி வளரச்சிக் குறைவுக்கு பல்வேறு காரணங்கள் காணப்பட்டாலும் மிக பிரதான காரணங்களின் ஒன்றாக மாணவர் இடைவிலகல் காணப்படுகின்றது.

மாணவர்கள் இடைவிலகலுக்கான முக்கியமான காரணமாக வறுமை காணப்படுகின்றது. அந்த வகையில் வறுமை ஏற்படுவதற்கு பிரதான காரணமாக காணப்படுவது அதிகரித்து வரும் விலையேற்றத்துக்கு ஏற்ப தோட்ட தொழிலாளிகளின் சம்பளம் அதிகரிக்கப்படாமையே ஆகும். இதனால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குரிய கல்வி நடவடிக்கைக்குரிய செலவினங்களை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றமையால் மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலக வேண்டிய நிலை உருவாகின்றது.

மேலும் குடும்பத் தலைவரின் மதுப்பழக்கம் காரணமாக அதிகமான குடும்பத் தலைவர்களின் வருமானம் அதற்றாகவே செலவாகின்றது.இதனால் பிள்ளைகளுக்கு கல்விச் செலவுக்கான பணம் கிடைப்பதில்லை. தந்தையின் குடிப்பழக்கத்தால் ஏற்படும் விபரீதங்கள் பாடசாலையில் மாணவர்களுடைய அந்தஸ்தை குறைப்பதால் மாணவர்கள் பாடசாலைகக்கு செல்லாத நிலைமை உருவாகின்றது.

மலையகப் பகுதிகள் சிலவற்றில் பாடசாலை அமைந்துள்ள பிரதேசம் காட்டு யானைகளுடைய ஆதிக்கம் நிறைந்த பிரதேசம் ஆகையால், மாணவர்கள் காட்டுயானைகளுடைய தாக்குதல்களுக்கு உள்ளாகக் கூடிய அபாயம் காணப்படுகின்றது. இந்த அச்சம் காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல மறுத்து வருகின்றனர்.

மலையக மக்களின் குடியிருப்புகள் மலைப்பாங்கான பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருப்பதால், அங்கு சென்று வருவதற்குரிய பாதை வசதிகள் குறைவாக உள்ளதால் மாணவர்கள் உரிய நேரத்துக்கு பாடசாலைக்கு சமுகம் தருவதிலும் சிக்கல்கள் உள்ளன. அத்துடன் பாதுகாப்பு சார்ந்த விடயங்களிலும் பெரும் சிரமத்தை எதிர் கொள்வதால் அவர்கள் பாடசாலையை இடைநிறுத்தும் தீர்மானத்தை எடுக்கின்றனர்.

மலையகப் பகுதியில் தாய்மார் அதிகமாக வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதனால் வீட்டில் பிள்ளைகளை கவனிக்க யாரும் இல்லாத நிலை உருவாவதுடன், பிள்ளைகளே வீட்டில் தங்களது இளைய சகோதரர்களுக்குரிய, தந்தைக்குரிய பணிகளை செய்ய வேண்டியுள்ளதால் அவர்களால் கல்வியை தொடர முடியாத நிலை உருவாகி பாடசாலைக் கல்வியை இடைநிறுத்துகின்றனர்.

இன்று பாடசாலை மாணவர்கள் மத்தியில் சிறுவயது காதல் தொடர்புகள் அதிகரித்து வருவதுடன், இதனால் மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்ட முடியாத நிலையும் ஏற்படுகின்றது. மலையகப் பிரதேசத்தில் பிள்ளைகளின் பெற்றோர் போதிய கல்வி அறிவு அற்றவர்கள். ஆகையால் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி அறிவு பற்றிய விடயங்களிலும் அசமந்தப்போக்குடன் இருப்பதுடன் மாணவர்கள் மத்தியிலும் இதே மனநிலை காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் கல்விக்குரிய முக்கியத்துவத்தை வழங்காமல் பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர்.

ஏற்கனவே பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களின் சுதந்திரமான செயற்பாடுகள் காரணமாகவும், அவர்கள் பாடசாலை தொடர்பாக கூறும் தவறான கருத்துகள் காரணமாகவும், அவர்களுடன் நெருங்கிப் பழகும் மாணவர்களுக்கும் இடைவிலகுகின்ற எண்ணம் தோன்றுகின்றது. அத்துடன் சிறுவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் அதிகரித்து வருவதால் சிறுவர் தொழிளாளர்களாக செல்ல பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர்.

மலையகத்தில் ஆண் பிள்ளைகளை விட பெண்பிள்ளைகளே கல்வியில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் மற்றவர்களின் சுகவீனம், தாய்மார்களின் பிரசவம், விருந்தினர் வருகை, திருவிழாக்களின் போது சம்பந்தப்பட்டவர்களை கவனிப்பதற்காக பாடசாலை செல்வதை தடை செய்தல், வீட்டு வேலைகள் அனைத்தையும் தாயோடு பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தப்படுவதால் வீட்டில் படிக்க நேரமின்மை ஏற்படுகின்றது. விசேடமாக பெண்கள் பருவமடைந்ததும் சடங்கு சம்பிரதாயம் என்று மூன்று மாதங்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். இவ்வாறு மூன்று மாதங்கள் பாடசாலை செல்லாதவிடத்து பாடசாலையை விட்டு இடைவிலகி விடுகின்றனர்.

மேற்கண்ட பிரச்சினைகளே மலையக மாணவர்கள் பாடசாலைக் கல்வியைப் புறக்கணித்து இடைவிலகுவதில் செல்வாக்கு செலுத்தும் பிரதான காரணிகளாக அடையாளம் காணப்படுவதுடன் இத்தகைய பிரச்சினைகளின் செல்வாக்கு காரணமாகவே மலையக கல்வி வளர்ச்சியும் பின் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மலையக பெருந்தோட்டங்களில் கல்வியின் செல்வாக்கு மந்த நிலையில் இருந்த காலத்தில் சில தோட்ட அதிகாரிகள், தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் வகிக்கும் முக்கியஸ்தர்கள், ஆசிரியர்களின் ஆலோசனைகளுடன் பள்ளிக்கூட கங்காணி என ஒருவரை நியமித்து, பாடசாலை நாட்களில் அவர் மக்களின் குடியிருப்புக்களுக்குச் சென்று பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வருவது வழக்கத்திலிருந்தது.

அக்காலத்தில் தோட்டப்புற பாடசாலைகளில் தரம் 5 வரையே பாடங்கள் நடை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. நாளடைவில் தரம் 8 வரையும், தற்போது முன்னிலைப் பாடசாலைகளில் க.பொ.த. சாதாரண தர, க.பொ.த உயர் வகுப்பு வரை இன்று நடைபெறுகிறது. இதேவேளை சில தோட்டப்புற பாடசாலைகளில் தரம் 6 இல் இருந்தே இடைவிலகல் நடைபெறுகிறது. தரம் 7,8,9,10 வரையும் இடைவிலகலை கட்டுப்பாடுக்கு கொண்டு வர முடிவதில்லை.

பாடசாலையில் சேரும் பிள்ளைகள் முழுமையான கல்வியைப் பெறாது இடையில் பாடசாலையை விட்டு விலகல் இடைவிலகல் எனப்படும். ஒரு பிள்ளை தேவையான கல்வியைப் பெறாதிருப்பது நாட்டின் வளத்தை வீண்விரயம் செய்யும் செயலாக இருக்கின்றது. இடைவிலகலால் அரசும் பெற்றோரும் செலவிடும் முதலுக்குரிய சரியான விளைவு கிடைக்காமல் போகின்றது.

போல்ராஜ் சந்திரமதி
ஊடகக் கற்கைகள் துறை மாணவி
யாழ். பல்கலைக்கழகம்.

Related Articles

Latest Articles