” பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு” – ஜனாதிபதி உறுதி

விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்சாங்கம் அர்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தோட்டப் பகுதி மக்கள் முகம்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவுடன் (PRC) ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காணிப் பிரச்சினை உட்பட விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதோடு, தற்போது தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்ற மகாவலி காணிப் பிரச்சினை குறித்தும் ஆராயப்பட்டது.

அதேபோல் பெருந்தோட்ட நிறுவனங்களில் செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

எதிர்வரும் 10 – 15 வருடங்களுக்குள் பெருந்தோட்ட நிறுவனங்களில் குத்தகைக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் விவசாயத்துறையை நவீன மயப்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல அரசாங்கம் முற்படுமாயின் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான புதிய குத்தகை வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும் அனைத்து நிறுவனங்களினதும் செயற்பாடுகளும் வரவேற்கத்தக்க வகையில் காணப்படவில்லை என்பதால் குத்தகைக் காலத்துக்கான புதிய அடித்தளம் ஒன்றை கட்டமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவிற்கு பணிப்புரை விடுத்தார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளை மதிப்பிடுதல் மற்றும் புதிய குத்தகை கட்டமைப்பை உருவாக்குவதற்காக 2018 இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பை புதுபிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

காணிகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் அரசாங்கத்தின் அனுமதியின்றி தமது பங்குகளை விற்பனை செய்வதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு இடமளிக்கக்கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விவசாயம் மற்றும் விவசாய நவீனமயப்படுத்தலின் ஓர் அங்கமாக காணிகளில் மாணிக்க கல் அகழ்வு செயற்பாடுகளையும் அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது என்றும் தெரிவித்தார். இது தொடர்பில் பெருந்தோட்ட மறுசீரமைப்புச் சபையின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டன.

பெருந்தோட்ட வீட்டுப் பிரச்சினை மற்றும் தேயிலை, இறப்பர், தெங்கு உற்பத்தி சார்ந்த பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

தொழிலாளர்களுக்கு காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான வேலைத்திட்டம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதோடு, காணி மீட்பு ஆணைக்குழுவின் பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

அதேபோல் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

பெருந்தோட்ட மறுசீரமைப்பு சபையின் தலைவரும் பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட அலோசகருமான ஆர். பாஸ்கரலிங்கம் உள்ளிட்ட குழுவின் ஏனைய உறுப்பினர்களான விஷ் கோவிந்தசாமி, கலாநிதி ரொமேஷ் டயஸ் பண்டாரநாயக்க, சரித்த ரத்வத்த, நிராஜ் டி மெல், கிறிஷாந்த இ கிரிஷாந்த பெரேரா, லயனல் ஹேரத், சஞ்சய ஹேரத், கலாநிதி ரொஹான் பெர்னாண்டோ, லியோன் பொன்சேக்கா, லீலநாத் விக்கிரமாராச்சி, தரங்கனி விக்கிரமசிங்க, ஸ்ரீமால் விஜேசேகர உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles