” இன்று வாழ்க்கைச்செலவு உச்சம் தொட்டுள்ளது. இந்நிலையிலும் ஆயிரம் ரூபா குறித்து மட்டுமே பேசப்படுகின்றது. அத்துடன், கூட்டு ஒப்பந்தத்திலுள்ள சலுகைகள் எதுவும் நீக்கப்படாமலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவேண்டும். இனியாவது அம்மக்களின் வலி நிறைந்த போராட்டத்தை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரா பிரகாஷ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
வாழ்க்கை செலவு பாரதூரமாக அதிகரித்துள்ள போதிலும் பெருந்தோட்ட மக்களின் வலி நிறைந்த போராட்டத்தை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை. இதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கிலும் கொடுத்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. நாட்டில் மத சுதந்திரம் காணப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் அவ்வாறில்லை. இலங்கை பூகோள ரீதியில் முக்கிய இடத்தை வகிக்கிறது என்பதற்காக தேசிய சொத்துக்களை சர்வதேசத்திற்கு தாரை வார்க்க இடமளிக்க முடியாது.
கொவிட் தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்து அனைத்து மக்களுக்கும் வழங்க முடியாதா? இதற்கான பலம் அரசாங்கத்திற்கு இல்லை. மேல் மாகாணம் அபாய வலயமாக பெயரிடப்பட்டுள்ள போதிலும் இங்கு துறைமுகம் உள்ளிட்டவற்றில் தொழில் புரிவபர்களுக்கு முதலில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மத்திய வங்கி மோசடியுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதாகக் கூறியே அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் தற்போது அதனை விட பாரிய மோசடிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் இடம்பெற்ற சீனி இறக்குமதி மூலம் கிடைத்த வருமானமே கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள போதுமானதாகும் என்றார்.