நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாக செயலாளர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர் நேற்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததோடு மாலை வேளையில் இந்திய உயர்ஸ்தானிகரையும் சந்தித்தனர்.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் இன்று பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்களுக்கு முதல்கட்ட நிவாரணமாக கோதுமை மா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டதாகவும் அதற்கு பிரதமர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாள்தோறும் காலையில் வேலைக்கு செல்வதால் அவர்களுடைய இரண்டு வேளை உணவிற்கு கோதுமை மா அதிகம் பயன்படுத்துவதால் முன்னுரிமை அடிப்படையில் நிவாரணமாக கோதுமை மாவை வழங்க கோரிக்கை முன்வைத்துள்ளதாக கூறினார்.
69 ரூபாவிற்கு இருந்த கோதுமை மா ஒரு கிலோ இன்று 300 ரூபா வரை உயர்ந்துள்ளதால் பெருந்தோட்ட மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகையால் 250,000 பெருந்தோட்ட மக்களுக்கும் நிவாரணமாக கோதுமை மா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் இந்த அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகள் மிக மோசமாக இருப்பதாகவும் இந்த மோசமான நிலைக்கு ஜனாதிபதி முற்றுமுழுதாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த மதகுருமார்கள் தொழிற்சங்கங்கள் சட்டத்தரணிகள் புத்திஜீவிகள் என பல்வேறு தரப்பினர் உள்ளடங்கிய 69 லட்சம் மக்கள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் பழனி திகாம்பரம் கூறியுள்ளார்.
நாடு இக்கட்டான நிலையில் இருந்த போது அதனைப் பொறுப்பேற்க எவரும் முன்வராத நிலையில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் ஆனால் உடனடியாக நாட்டை சீரான நிலைக்குக் கொண்டுவர முடியாது எனவும் அதற்கு அவருக்கு காலம் வழங்கப்பட வேண்டும் எனவும் பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டினார்.
ஆனால் இந்த ஜனாதிபதி இருக்கும் வரை அது சாத்தியப்படுமா என்ற சந்தேகத்தை எழுப்பிய அவர், தற்போதைய நிலையில் சஜித் பிரேமதாச அல்லது அனுரகுமார திசாநாயக்க அல்லது முழு பாராளுமன்றமும் நாட்டை பொறுப்பேற்றாலும் உடனடியாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் கூறியுள்ளார்.
நாடு முற்றுமுழுதாக வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளதாகவும் இதற்கு ராஜபக்சக்கள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் பழனி திகாம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.










