பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான புதிய அரசுக்கு ஆதரவளிக்கபோவதில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, சிரேஷ்ட உப தலைவர் ராஜித சேனாரத்ன ஆகியோர் கட்சியின் இந்த நிலைப்பாட்டை அறிவித்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், மக்களின் கோரிக்கையைமீறி, ராஜபக்சக்களை காக்கும் வகையில் ரணில் பதவியேற்றமை தவறு எனவும் சுட்டிக்காட்டினர்.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும், புதிய அரசுக்கு ஆதரவில்லை என அறிவித்து, விரைவில் பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவும் இன்று காலை கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது.
இதன்போது ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்கு ஆதரவளிக்ககூடாது எனவும், அமைச்சு பதவிகளை ஏற்கவே கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, அதாவுல்லா உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகளும், அரசில் இணையாமல் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பனவும் அரசில் இணைய தயாரில்லை என அறிவித்துவிட்டன.
இதற்கிடையில் அரசில் இணைவது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவெதையும் எடுக்கவில்லை. எனினும், பொருளாதாரத்தை மீட்பதற்காக ரணில் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
அநுரபிரியதர்சன யாப்பாவின் தலைமையில் இயங்கும் 8 உறுப்பினர்களின் நிலைப்பாடும் வெளியாகவில்லை.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (14) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவி விலகியபின்னர், பொதுஜன பெரமுனவின் அரசும் கலைந்தது. இந்நிலையில் புதிய அரசை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துவருகின்றார். இந்நிலையிலேயே மொட்டு கட்சி எம்.பிக்களை சந்தித்து, ஆலோசனை நடத்தவுள்ளார். நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவை வழங்குமாறு கோருவார்.
மொட்டு கட்சியினர் ஆதரவு வழங்கி, அமைச்சரவையில் இடம்பெறக்கூடும். சில தரப்பு சுயாதீனமாக இருந்து ஆதரவை வழங்கலாம். நாளை நடைபெறவுள்ள சந்திப்பே, அமையவுள்ள ஆட்சி நிலையானதா அல்லது தொங்கு நாடாளுமன்றம் தொடருமா என்பதை நிர்ணயிக்கும்.
நாடாளுமன்றத்தில் உள்ள பிரதான கட்சிகள், அரசுக்கு ஆதரவு வழங்க மறுத்துவிட்டதால் மறுபடியும் மொட்டு கட்சி உறுப்பினர்களுடனேயே ஆட்சி அமையும் நிலை உருவாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் தற்போதைய சூழ்நிலையில்,
🌷 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 107
🐘 ஐக்கிய தேசியக் கட்சி – 01
⛴ த.ம.வி.பு. கட்சி (பிள்ளையான்) – 01
⚖️ முஸ்லிம் தேசிய கூட்டணி – 01
🦚 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 01
🌳 முஸ்லிம் காங்கிரஸ் – 01
✍️ ஈபிடிபி – 02
🤾♀️ அரவிந்தகுமார் – 01
🤾♀️ டயானா – 01
🤾♀️ சாந்த பண்டார – 01
🤾♀️ சுரேன் ராகவன் – 01
ரணிலுக்கு ஆதரவாக (சபாநாயகர்தவிர) 117 ஆசனங்கள் உள்ளன. மொட்டு கட்சி எம்.பியொருவர் உயிரிழந்துவிட்டார். அவருக்கு பதிலாக புதியவர் அடுத்தவாரம் தெரிவுசெய்யப்படுவார்.
🛑 எதிர்க்கட்சிகள் – 65
☎️ ஐக்கிய மக்கள் சக்தி – 49
🏠 இலங்கை தமிழரசுக்கட்சி – 10
⏱ தேசிய மக்கள் சக்தி – 03
🚲 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 02
🐟 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 01
🛑சுயாதீன அணிகள் – 42
✍️சுயாதீன அணி – 01
சுதந்திரக்கட்சி
தேசிய சுதந்திர முன்னணி
பிவிருது ஹெல உறுமய
தேசிய காங்கிரஸ்
எமது மக்கள் சக்தி
அநுர யாப்பா அணி
✍️சுயாதீன அணி – 02
இ.தொ.கா.
✍️சுயாதீன அணி – 03
அநுர பிரியதர்சன யாப்பா
✍️ சுயாதீன அணி – 04
முஸ்லிம் எம்.பிக்கள்
(20 ஐ ஆதரித்து அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டவர்கள்)
இதில் இ.தொ.காவினர் ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். அநுர அணியின் முடிவு தெரியவரவில்லை
நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது அறியக்கூடியதாக இருக்கும். பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது இது புலப்படும்.
ஆர்.சனத்