அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐவர் படுகொலை சம்பவத்தில் பிரதான துப்பாக்கிதாரியாக செயற்பட்டவரின் 39 வயதான மனைவியும், அவரின் 72 வயதான தந்தையுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவன் ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய். அவர் ஓய்வூதியமும் பெற்றுவந்துள்ளார் என தெரியவருகின்றது.
அத்துடன், துப்பாக்கிச்சூட்டை நடத்தியபிரதான சந்தேகநபர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மற்றைய துப்பாக்கிதாரியும் முன்னாள் பாதுகாப்பு படை அதிகாரியாவார்.
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நிழல் உலக தாதா கொஸ்கெட சுஜியே இக்கொலைக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார் எனவும், துப்பாக்கிச்சூடு நடத்திய முன்னாள் கடற்படை அதிகாரி வெளிநாடு தப்பிச்செல்ல உதவியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மற்றைய நபரும் தப்பியோடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எனினும், காவல்துறை தரப்பில் இருந்து இது தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
பெலியத்தயில் ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இதுவரை மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.










