” பேச்சுவார்த்தைகள் ஊடாக உறுதி அளிக்கப்படுவதும் பின்னர் ஏமாற்றப்படுவதும் வழமை.” என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அவர் எடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
” மலையகத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை நடந்ததும் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சு நடத்தப்படுவது வழமை. ஆனால் மலையக மக்களின் காணி உரிமைகள் தொடர்பான காணி பிரச்சினைகள் தொடர்பான பிரச்சனைகள் எழும் போது அது தொடர்பான கலந்துரையாடல் பெருந்தோட்ட அமைச்சோடு முன்னெடுக்கப்பட்டாலும் அது உறுதி மொழியோடு நின்று விடுகின்றதே தவிர செயற்பாட்டு வடிவம் பெறுவது இல்லை.
இதற்கு ஒரே தீர்வு பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு பெருந்தோட்ட காணிகளை குத்தகைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் வகையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இந்த காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதே வேளை அங்கு வாழ்கின்றவர்களுக்கு அங்கேயே 10 பேர்ச் காணி வழங்கப்பட்டு அவர்களின் வீடுகளை நிர்மாணித்து வாழ்வதற்கான காணி மற்றும் வீட்டு உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். இதுவே நிரந்தர தீர்வாகும்.
கலந்துரையாடலில் இவ்வாறான சம்பவங்கள் இனி இடம்பெறாது என உறுதிமொழி கடந்த காலங்களில் வழங்கப்பட்டாலும் இன்றுவரை தொடர்ந்து வந்துள்ளன. உதாரணமாக கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொடர்ச்சியாகவே தொழிலாளர்களின் உரிமை மீறப்பட்டு வந்துள்ள அமையும் குறிப்பிடத்தக்கது எனவே நிரந்தர தீர்வினை நோக்கிய நகர்வை அர்த்தமுள்ளதாக இருக்கும்.
எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். அவரினூடாக இது சாத்தியப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு . ” -என்றுள்ளது.
