” ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நான் காட்டிக்கொடுக்கவில்லை. அமைச்சு பதவி இல்லாமல் என்னால் அரசியல் செய்ய முடியும். அமைச்சு பதவிக்காக அலைபவர்களே கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
” எனது பெற்றோர் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்தவர்கள். நானும் சுதந்திரக்கட்சி ஊடாகவே அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன். கட்சிக்குள் என்னை ஓரங்கட்டினர். வலிகளை தாங்கிக்கொண்டு பயணித்தோம். இருந்தும் ஒதுக்கினர். அதனால்தான் 2001 இல் கட்சியை விட்டு வெளியேறினேன்.” எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
” கட்சியின் வளர்ச்சி மற்றும் ஆதரவாளர்களின் நலனை முன்னிறுத்தியே நான் செயற்படுகின்றேன். ஆனால் வாழ்நாள் முழுவதும் அமைச்சராக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் வாழ்பவர்கள்தான், எனக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுத்துவருகின்றனர்.
இக்கட்டான – சவாலான நிலையில்தான் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றேன். கட்சியை கிராமிய மட்டத்தில் வலுப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்தேன். கட்சிக்குள் கட்டமைப்பொன்றை உருவாக்கினேன்.
பொதுச்செயலாளர் பதவி என்பது எனக்கு கட்டாயம் அல்ல. அப்பதவியை துறப்பதற்குகூட நான் தயாராகவே இருக்கின்றேன். நாளை வேண்டுமானாலும் இதை செய்ய தயார். ஆனால் இரு பக்கங்களிலும் கால்களை வைத்துக்கொண்டு பயணிக்ககூடாது. இருந்தால் ஒரு பக்கம் இருக்க வேண்டும். ” எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
