பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் மொட்டுகட்சி தவிர்த்து ஏனைய கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“பொதுத்தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்காக முயற்சிக்கின்றோம். அதற்காக பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சிகளை இணைத்துக்கொள்வதற்கான பேச்சுகள் முன்னெடுக்கப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும்.மொட்சியுடன் கலந்துரையாடல் நடத்தப்படமாட்டாது.
நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமெனில் ஒரு தரப்புக்கு அதிகாரம் செல்லக்கூடாது, நிறைவேற்று அதிகாரம் ஒரு தரப்பிடமும், நாடாளுமன்ற அதிகாரம் மற்றுமொரு தரப்பிடம் இருந்தால் நல்லது.
பொருளாதாரத்தை மீட்பதற்கு ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை அல்ல, சாதாரண பெரும்பான்மையைக் கைப்பற்றுவதற்குரிய முயற்சியே இடம்பெறுகின்றது. அதற்காகவே மகா கூட்டணி அமைப்பதற்கான நகர்வு இடம்பெறுகின்றது.” –என்றார்.
