தென்பசுபிக் பிராந்திய நாடான சமோவாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் மாநாட்டுக்கு செல்லமாட்டார். எனினும், வெளிவிவகார அமைச்சு மற்றும் பிரிட்டனில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று மாநாட்டில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளது.
அதிகாரிகள் மட்டத்திலான குழு பங்கேற்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை பொதுநலவாய மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பிரிட்டிஷ் மன்னர் பங்கேற்கின்றார். அவர் மாநாட்டுக்கு தலைமை வகிப்பார்.
பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அரச தலைவர்கள் அல்லது வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்பது வழமை.
பொதுநலவாய அமைப்பு தொடர்பில் முன்னர், ஜே.வி.பியாக இருந்தகாலகட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










