பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கப்படமாட்டாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறும், தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களை நஷ்டம் ஏற்படாத வகையில் தற்காலிகமாக நிறுத்துமாறும் திறைசேரி அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறைநிரப்பு மதிப்பீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னரே அதனை சரியாகக் கூற முடியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாராளுமன்றத்தில் கூடியபோது எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதியொதுக்கீடு செய்வது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கொழும்பு வடக்கு பர்க்கியூசன் வீதியிலுள்ள நஜீமா தோட்டத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இதன் பொது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இந்தக் காணி 2006 ஆம் ஆண்டில் குறைந்த வருமானம் பெரும் மக்களை நிலையான வீடுகளில் குடியேற்றும் வரை தற்காலிகமாக குடியேற்றிய இடைத்தங்கல் முக்காக பயன்படுத்தப்பட்டதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், அண்மைக்காலமாக இந்தக் காணியில் ஒருசிலர் வலுக்கட்டாயமாகத் தங்கியிருப்பதாகவும் அவர்களை அப்புறப்படுத்த சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதேபோன்று, முகத்துவாரம் கிம்புலாஎல மைதானத்தை மறுசீரமைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ யதாமினி குணவர்தனவால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
கொழுப்பு நகரில் உள்ள மாடிவீட்டுத் திட்ட குடியிருப்பாளர்களுக்கு நீர் வசதிகளை வழங்குவதில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.கொழும்பு நகரில் உள்ள மாடிவீட்டு உரிமையாளர்களிடமிருந்து மாதாந்த வீட்டுக் கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்கள் உள்ளடங்கலாக ஒரு பட்டியல் வழங்கப்படுவதாகவும் இதில் நீர்க்கட்டணம் அதிகளவில் அறவிடப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
இதன்போது தேசிய நீர்வழங்கல் சபையின் மூலம் மொத்தமாக நீர் விநியோகிப்பதால் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கட்டணங்களுக்கு அமைய மாதாந்த கட்டணம் அறவிடப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மூலம் நீர்க்கட்டணங்களை ஏன் அறவிட முடியாது என இதன்போது அமைச்சர் வினவினார். மாடி வீடுகளை முகாமைத்துவம் செய்வதற்கு கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையை (Condominium Management Authority) நிறுவுவதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அதன் பின்னர் இந்த சிரமம் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட உரிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
