‘பொலிஸ் அதிகாரி இளங்கோவனின் மரணத்தில் சந்தேகம்’

கம்பளை வைத்தியசாலையின் நீர் தாங்கியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தனது தந்தையான பொலிஸ் சார்ஜன்ட் இளங்கோவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரின் மகன் அபிநாத் தெரிவித்துள்ளார்.

பூண்டுலோயா பிரதேசத்தை சேர்ந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நிலையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு, பின்னர் குணமாகியிருந்த சந்தரப்பத்தில் ,நெஞ்சுவலி காரணமாக கடந்த மாதம் 8 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வைத்தியசாலைக்குள் வைத்து காணாமல்போயிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கம்பளை, கொத்மலை , பூண்டுலோயா பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் 51 நாட்களில் பின்னர் கடந்த வெள்ளி கிழமை வைத்தியசாலை நீர்த்தாங்கியிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டார்.

மேலும் அவரின் சடலம் உருக்குலையாமல் இருந்தமை தெரியவந்தது,

மேற்படி சம்பவம் தொடர்பாக அவரது மகன் அபினாத் கருத்து தெரிவிக்கையில்,

எனது தந்தைக்கு வீட்டிலோ அல்லது தொழில் புரிந்த இடத்திலோ தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சிறிதளவேனும் பிரச்சினைகள் இருக்கவில்லை .அவர் எங்களுடன் சந்தோஷமாகவே இருந்தார்.

எனவே, மரணத்தில் சந்தேகம் நிலவுகின்றது. இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்.” – என்றார்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக இராசாயன பரிசோதனைகளுக்காக சடலத்தின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த மரணம் தொடர்பான ஸ்தல விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதவான் ஸ்ரீநித் விஜேசேகர மேற்கொண்டார்.

Related Articles

Latest Articles