கண்டியில் உள்ள பழைய போகம்பறைச் சிறைச்சாலையில் கடமையிலிருந்த பிரதான சிறைச்சாலை அதிகாரி உள்ளிட்ட மேலும் 26 கைதிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பி.சி.ஆர் பரிசோதனை மூலம் இவர்கள் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் .
இவ்வாறு தொற்றுதலுக்கு உள்ளாகியுள்ள பிரதான சிறைச்சாலை அதிகாரி தெல்தெனிய விசேட சிகிச்சை நிலையத்திற்கு நேற்று(2) அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாரசிங்க தெரிவித்தார்.
மற்றும் கைதிகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சிறைச்சாலை திணைக்களத்தின் அனுமதியுடன் கண்டியிலுள்ள பழைய போகம்பறை சிறைச்சாலை, கைதிகளின் தனிமைப்படுத்தும் நிலையமாக செயற்படுத்தப்பட்டுவருகின்றது.
தற்பொழுது இங்கு,மூன்று சிறைச்சாலை அதிகாரிகள், 182 கைதிகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் மூலம் தெரியவருகின்றது.
மேலும் மத்திய மாகாணத்தில் நேற்று (02) காலை வரை 501 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்தியமாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் கண்டி மாவட்டத்திலேயே அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கண்டி மாவட்டத்திலிருந்து 303 பேரும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 146 பேரும் மற்றும் மாத்தளை மாவட்டத்திலிருந்து 52 பேரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.










