பொலிஸில் இருந்துகொண்டு போதைப்பொருள் பாவிக்கும் அதிகாரிகள் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்படுவார்கள். அவ்வாறான நபர்கள் தொடர்பான பெயர் பட்டியல் உள்ளது. ஒரு மாத காலத்துக்குள் இதற்கான நடவடிக்கை இடம்பெறும்.”
இவ்வாறு பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பொலிசுக்குள் போதைப்பொருள் பயன்படுத்தும் குழுவை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது.
அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நபர்கள், பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்படுவார்கள், ஒரு மாத காலத்துக்குள் இதற்கான நடவடிக்கை அமுலாகும்.
பெயர் பட்டியல், மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறுகில காலத்துக்குள் ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கை இடம்பெறும். போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் பொலிஸில் இருக்க முடியாது.
அதேவேளை, எதிர்காலத்தில் பொலிஸ் சேவையில் இணைய உள்ளவர்களும், ஆரம்பக்கட்ட பயிற்சிக்கு முன்னர், தாம் போதைப் பொருள் பயன்படுத்துவதில்லை என்பது தொடர்பான மருத்துவ சான்றிதழ் அவசியம். ” – என்றார்.
