‘யுக்திய ஒப்பரேஷன்’ ஆரம்பிக்கப்பட்டு 14 நாட்களுக்குள் 85 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன .
அத்துடன், பாதாளகுழு உறுப்பினர்கள் மற்றும் போதைபொருள் வியாபாரிகளிடமிருந்து 55 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான சொத்துகளும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .
பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய கடந்த 17 ஆம் திகதி ‘யுக்திய ஒப்பரேஷன்’ ஆரம்பமானது. நேற்று 15 ஆவது நாளாகவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய ஒப்பரேஷன்’ நடவடிக்கையின்கீழ் 14 நாட்களுக்குள் 20 ஆயிரத்து 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆயிரத்து 18 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். 189 பேர் தொடர்பில் சொத்து சம்பந்தமான விசாரணகள் முன்னெடுக்கப்படுகின்றன.
போதைப்பொருளுக்கு அடிமையான ஆயிரத்து 298 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 17 முதல் டிசம்பர் 14 நாட்களுக்குள்11 கிலோ 600 கிராம் ஹெரோயினும், 8 கிலோ 378 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 297 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன. 20 லட்சத்துக்கு மேற்பட்ட கஞ்சா செடிகளும் மீட்கப்பட்டுள்ளன.
