இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, இலங்கை அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 108 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும், பதிரன 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 109 ஓட்டங்கள்; அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் பெர்குசன் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டனர்.
இலங்கை தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் பெதும் நிஷாங்க மட்டும் தனி ஆளாக வெற்றிக்கு போராடினார். ஆனால் மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதிலும் பெர்குசன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தன. அந்த ஓவரை கிளென் பிலிப்ஸ் வீசினார். களத்தில் அரைசதம் அடித்த நிசங்கா இருந்தார்.
இலங்கை பக்கமே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அந்த ஓவரில் வெறும் 2 ஓட்டங்கைள மட்டுமே விட்டுக்கொடுத்த அவர் எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி நியூசிலாந்துக்கு திரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை 103 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.