இலங்கை தமிழரசுக் கட்சி இனவாதம் பேசவில்லை எனவும், இனத்தின் இருப்பை பற்றி மட்டுமே கருத்துகளை வெளியிட்டுவருகின்றது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” எங்களுடைய பிரதேசங்களில் நாங்கள் கசிப்பு வழங்கி வென்றதாக ஒரு சில அமைச்சர்கள் கூறியுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியென்பது போதைக்கு எதிரானக் கட்சியென்பதை மீண்டும் இவ்விடயத்தில் குறிப்பிடுகின்றேன். ஒரு சிலர் – சிலவேளை அந்த தவறை செய்திருக்கலாம். ஆனால் கட்சி என்ற அடிப்படையில் அவ்வாறு நடக்கவில்லை என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன்.” – எனவும் தமிழரசுக் கட்சியின் எம்.பி. குறிப்பிட்டார்.
நாம் இனவாதம் பேசவில்லை. எமது இனத்தின் இருப்பை பற்றி மட்டுமே பேசுகின்றோம். எங்களுக்கென ஒரு தாயம் இருக்கின்றது என சொல்கின்றோம், சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் எனக் சொல்கின்றோம். நாம் எமது பிரச்சினைகளைப் பற்றி பேசும் போது அது இனவாதமாகக் காண்பிக்கப்படுகின்றது. போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும்போது அதுவும் இனவாதமாகக் காட்டப்படுகின்றது. நீங்கள் பேசினால் சகோதரத்துவம், நாங்கள் பேசினால் இனவாதமா?” – எனவும் சத்தியலிங்கம் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
தமிழர்களின் பிரச்சினையை இந்த அரசாங்கமும் இனவாதமாக பார்க்குமானால் இந்நாடு ஒருபோதும் ஒரு அடியேனும் முன்னேற முடியாது.” -எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.