மக்களே அவதானம் – மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

மோசடியான தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றுவது தொடர்பில் பொதுமக்களை மிக அவதானத்துடன் இருக்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து அல்லது பல்வேறு பெறுமதிவாய்ந்த பொருட்களைக் கொண்ட பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுங்க வரிகளைச் செலுத்துமாறு கோரி இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது போன்ற மோசடிகள் மூலம் தனிப்பட்டவர்களிடமிருந்து பண மோசடி செய்வது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் அண்மைக்காலத்தில் துரித அதிகரிப்பு ஒன்றை அவதானிக்க முடிவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எனவே, முறையான சரிபார்த்தலின்றி மேற்குறித்த தகவல்களின் அடிப்படையில் இனந்தெரியாத தரப்பினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்பிலிட வேண்டாம் என்றும் அல்லது வேறு வழிகளில் பணம் அனுப்ப வேண்டாம் என்றும் நிதியியல் உளவறிதல் பிரிவு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

மேலும், அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மோசடிக்காரர்கள் அத்தகைய
கொடுக்கல்வாங்கல்களை முன்னெடுக்கும் பொருட்டு உங்களிடமிருந்து பின்வரும்
தகவல்களைக் கோரலாம்.

தனிப்பட்ட அடையாள இலக்கம் (PIN)

அட்டைகளின் புறப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டவாறான கொடுப்பனவு அட்டைகளை
உறுதிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் அட்டை சரிபார்த்தல் பெறுமானங்கள் (CVV)

கொடுக்கல்வாங்கல்களை உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தடவை
கடவுச்சொற்கள் (OTP)

செல்லிட வங்கிச் சேவையில்ஃஇணையவழி வங்கிச் சேவையில் பயன்படுத்தப்படுகின்ற பயனர் அடையாளங்கள், கடவுச்சொற்கள் மற்றும் ஒரு தடவை கடவுச்சொற்கள்.

எனவே, அத்தகைய அந்தரங்கத் தகவல்களை எவரேனும் மூன்றாம் தரப்பினரிடம்
பகிர்ந்துகொள்ளக்கூடாது என்றும் அத்தகைய மோசடிகள் பற்றி விழிப்பாக இருக்குமாறும்
நிதியியல் உளவறிதல் பிரிவு பொதுமக்களை மேலும் வலியுறுத்துகின்றது.

இவ்வாறான குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் செய்திகள் கிடைக்கப் பெற்றால், நிதியியல் உளவறிதல் பிரிவின் 011-2477125, 011-2477509 என்ற இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

 

Related Articles

Latest Articles