மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலைமை இங்கும் உருவாகிவிடும் – என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன எச்சரிக்கை விடுத்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்தியாவில் தற்போது ஒட்சிசன் பற்றாக்குறை இருக்கின்றது. அவசர சிகிச்சை பிரிவுக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. எமக்கு இன்னும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை. எனினும், மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் அவ்வாறானதொரு நிலைமை உருவாகக்கூடும். ஏனெனில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கென வரையறையொன்று உள்ளது.
புத்தாண்டுக்கு பிறகு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எதிர்காலத்திலும் அந்த தொகை மேலும் அதிகரிக்கப்படலாம். கடந்தகாலங்களில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 90 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை. தற்போது புதிய வகை வைரஸால் அறிகுறிகள் தென்படுகின்றன. இளைஞர்களும் இலகுவில் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போதைய நிலை தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்து பொறுப்புடன் செயற்படவேண்டும். புத்தாண்டு நிகழ்வுகளை நடத்த வேண்டாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.” -என்றார்.
