மடுல்சீமை வர்த்தகர்களுக்கு செந்தில் தொண்டமானின் தலையீட்டால் தீர்வு!

லுணுகலை பிரதேச சபைக்கு உட்பட்ட மடுல்சீமை நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்களால் மாதாந்தம் கட்டப்படும் வாடகை கட்டணம் 1450 ரூபாயிலிருந்து 4500 ரூபாவை அதிகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் வர்த்தகர்களால் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாரும் இ.தொ.காவின் உபத்தலைவருமான செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அவரது தலையீட்டால் வர்த்தகர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

மடுல்சீமை நகரத்தில் உள்ள 10 வர்த்தக நிலையங்களுக்கும் மாதாந்தம் 1450 ரூபா வீதம் வாடகையாக லுணுகலை பிரதேச சபையால் அறவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென வாடகை கட்டணம் 4500 ரூபாவாக பிரதேச சபையால் அதிகரிக்கப்பட்டதால் வர்த்தகர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டனர்.

இது குறித்து செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு வர்த்தகர்கள் கொண்டுவந்தனர். உடனடியாக அவர் இந்த விடயம் தொடர்பில் லுணுகலை பிரதேச சபையின் தலைவருடன் கலந்துரையாடியதுடன் இந்நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தார். அத்துடன் பழைய வாடகை கட்டணத்தையே வர்த்தகர்களிடம் அறவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

செந்தில் தொண்டமானின் இந்த உடனடி தலையீட்டால் மீண்டும் வர்த்தகர்களிடம் பழைய கட்டணத்தையே அறவிடுவோமென உறுதிப்படுத்திய கடிதத்தை லுணுகலை பிரதேச சபையின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

செந்தில் தொண்டமானின் உடனடி நடவடிக்கைக்கு மடுல்சீமை வர்த்தகர்கள் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

– ஊடகப் பிரிவு

Related Articles

Latest Articles