யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1991ஆம் ஆண்டு தீவகத்தை இராணுவம் கைப்பற்றியது. அந்தச் சமயம், மண்டைதீவில் உயிருடன் பிடிபட்ட பொதுமக்களில் பலர் இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட துணைக் குழுக்களாலும் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்கள் தேவாலயக் காணியில் உள்ள கிணறு உட்பட 3 கிணறுகளில் போடப்பட்டு மூடப்பட்டன என்று கூறப்படுகின்றது.
இது தொடர்பில் விசாரணை நடத்தி அந்தக் கிணறுகளைச் சட்ட ரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவங்களுக்குக் கண்கண்ட சாட்சியங்கள் மற்றும் மதகுருமார் சிலரும் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது, ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கான வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்து. இதையடுத்து இந்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவிடம் பாரப்படுத்தப்பட்டது.
அத்துடன், மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்குப் பொலிஸார் கால அவகாசம் கோரியமையால் வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.