முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா மதுபோதையில் தவறு செய்துவிட்டதாகவும், இளம் வயதில் இருக்கும் அவருக்கு சமூகத்துடன் வாழ ஒரு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரி, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆளும் கட்சி உறுப்பினரகளைத் தவிர எதிர்க்கட்சியில் உள்ள தமிழ் முற்போக்கக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
குறித்த மனுவில் கையெழுத்திட்டமைக்கான காரணத்தை விளக்கி, கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து மனோ கணேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை :
”கொலைக் குற்றத்திற்காக சிறையில் உள்ள .முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மதுபோதையில் இருக்கும்போதே பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்தரவின் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. அத்துடன், துமிந்த சில்வா தற்போது ஐந்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.
நான் ஒரு அரசியல்வாதியாக இருப்பதற்கு அப்பால் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இருக்கிறேன். வெள்ளை வேன் கடத்தல், நீதிக்குப் புறம்பபான கொலைகள், உயிர் அச்சுறுத்தல் என்பவற்றுக்கு எதிராகவும், எனது உயிரைப் பணயம் வைத்து போராடியுள்ளேன்.
எனவே, மனித உரிமைகள் என்ற விடயத்தில் எனக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. இளம் வயதினர் நீண்ட காலம் சிறைவாசம் அனுபவிக்கக்கூடாது. அத்துடன் அவர்கள் தமது தவறுகளை சரிசெய்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். இது எனது பொதுவான கருத்து. துமிந்த சில்வா ஐந்து வருடங்கள் சிறையில் உள்ளார். அவர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளார். அவர் சமூகத்தில் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
இதேபோல், அரசியல் சார் குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்ட தமிழ் கைதிகள், தமது இளமைதின் பெரும்பகுதியை சிறையில் கழித்துள்ளனர். அவர்களில் இன்னும் விசாரணைகள் முன்னெடுக்கப்படாத, குற்றச்சாட்டுக்கள் எழுதப்படாதவர்களும் இருக்கின்றனர். அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும். அவர்களும் தமது குடும்பத்துடனும், சமூகத்துடனும் வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.” என்று மனோ கணேசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.