ஆதாரமற்ற வதந்திகளால் மனம் வேதனைப்படுவதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் கூறி உள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு இருவரும் பிரிந்து விட்டதாக அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால் 29 ஆண்டுகால திருமண பந்தம் முற்றுப் பெற்றுள்ளது. இந்த தம்பதியின் பிரிவு ஏன்? அதற்கு என்ன காரணம் இருக்கும் என்பது பற்றிய விவாதங்களும், கருத்துகளும் நாள்தோறும் வெளியாகி வருகின்றன. அவற்றில் எது உண்மை, பொய் என்பது பற்றி தெளிவில்லாத சூழலே நிலவுகிறது.
இந் நிலையில், ஆதாரமற்ற வதந்திகள், அவதூறுகளால் மனம் வேதனைப்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறி உள்ளதாவது; திரைத்துறைகளிலும், இத்தனை ஆண்டுகளாகவும் அவர் சம்பாதித்த மதிப்பு, மரியாதை, அன்பு ஆகியவற்றால் எனது தந்தை ஒரு சாதனையாளர். ஆனால், ஆதாரமற்ற, பொய்யான வதந்திகள் பரவும்போது மனம் உடைகிறது.
ஒருவரின் வாழ்க்கையை பற்றி பேசும்போது, உண்மையின் முக்கியத்துவம், மரியாதை ஆகியவற்றை மனதில் கொள்ள வேண்டும். பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். அவரின் கண்ணியத்தை மதித்து காக்க வேண்டும். எல்லா புகழும் இறைவனுக்கே.
இவ்வாறு அந்த பதிவில் கூறி உள்ளார்.
		
                                    









