வடக்கு, கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வேண்டி மன்னார் – அடம்பன் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் – மாந்தை மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடம் நோக்கி நேற்று வியாழக்கிழமை காலை அமைதிப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் சந்தியில் நேற்று காலை 10 மணியளவில் அமைதிப் பேரணி ஆரம்பமானது.
இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள். பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகப் பயணித்தனர்.
திருக்கேதீஸ்வரம் – மாந்தை மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை நோக்கிப் பேரணி சென்றடைந்தது.
“எங்கே எங்கள் உறவுகள் எங்கே?, இலங்கை அசரே இது நாடா அல்லது இடு காடா?, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், மனிதனும் புதை குழிக்குள் நீதியும் புதை குழிக்குள்ளா?, சர்வதேசமே மௌனத்தைக் கலை” உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் அடம்பனியில் இருந்து திருக்கேதீஸ்வரம் – மாந்தை மனிதப் புதைகுழி நோக்கிப் பேரணி சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வரம் – மாந்தை மனிதப் புதைகுழிக்கு முன் ஒன்றுகூடி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும், மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்டவர்களுக்காகவும் அஞ்சலி செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஏற்பாட்டுக் குழு சார்பாகக் கையளிக்கப்பட்டது.