” மனோ கணேசன் ஒற்றையாட்சியின்கீழ் செயற்படுபவர். அவரின் அரசியல் வேறு, எங்களின் அரசியல் வேறு.” – இவ்வாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மனோ கணேசன் மற்றும் ஹக்கீம் ஆகியோர் ஒற்றையாட்சியின்கீழ் செயற்படுபவர்கள். அவர்களின் அரசியல் வேறு. வடகிழக்கில் தமிழ் மக்களுடைய அரசியல் வேறு. அதை அவர்கள் தெளிவாக விளங்கி இருப்பார்கள்.
வரவு- செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் ஒற்றையாட்சி தொடர்பில் தெளிவாக எடுத்துரைத்தேன். இதற்காக மனோ கணேசன் என்னை பாராட்டினார்.
நாங்கள் தெற்கில் சிங்களவர்களோடு சேர்ந்து அரசியல் செய்கிறவர்கள், இதைப்பற்றி பேச முடியாது. நீங்கள் தெளிவாக பேசியது நல்லது எனவும் கூறினார்.
அதேபோல ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் பெருந்தலைவர். அஷ்ரப்புக்கு பின்னர் ஆளுமை உள்ள தலைவராக செயற்பட்டுவருகிறார். ஒற்றையாட்சியால் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை உணர்ந்து அவர் செயற்படுவாரென நம்புகின்றேன்.
தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றையாட்சியின்கீழ் வாழும் சூழலையே 13ஆவது திருத்தச்சட்டம் உருவாக்கும். இதனை தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள்
புரிந்து செயற்படவேண்டும்.” – என்றார்.
