மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது ஓமந்தைப் பொலிஸ் துப்பாக்கிச்சூடு!

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரை மோதித் தள்ளி தப்பிச் செல்ல முற்பட்டபோது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி, இருவரைக் கைது செய்துள்ளனர் என்று ஓமந்தைப் பொலிஸார் தொவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்  தகவலையடுத்துப் பாெலிஸ் நிலையப் பாெறுப்பதிகாரி ஜெயதிலக தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஓமந்தையில் இருந்து மறவன்குளம் நோக்கிக் கடத்தப்பட்ட மரக்குத்திகளுடனான வாகனம் பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டது.

இதன்போது, பொலிஸாரை மோதி விட்டு மரக்குற்றிகளுடன் வாகனம் தப்பிச் செல்ல முற்பட்டபோது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதனையடுத்து வாகனமும் அதில் இருந்த மரக்குற்றிகளும் மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஓமந்தைப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Related Articles

Latest Articles