நுவரெலியா, கந்தப்பளை பிரதேசத்தில் விவசாயிகளுக்கும், மரக்கறி சேகரிப்பாளர்களுக்கும் இடையில் மரக்கறி சேகரிக்கும் விடயத்தில் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடு ஏற்பட்டுவருகின்றது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் வெளியிடப்படும் விலைப்பட்டியலில் ஏற்படுகின்ற குளறுப்படியே இந்த முரண்பாட்டுக்கு காரணம் என கந்தப்பளை பிரதேச மரக்கறி சேகரிப்பாளர் சங்க தலைவர் ஆர்.தமிழ்வாணன் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை கந்தப்பளையில் நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட ஆர். தமிழ்வாணன் கூறியவை வருமாறு,
“ நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளில் கந்தப்பளை பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளுக்கு தரம் அடிப்படையில் சிறந்த கேள்வி காணப்படுகின்றது.
அதேநேரத்தில் கந்தப்பளை பிரதேசத்தில் இருந்தே தினமும் அதிகபட்ச மரக்கறிகள் அறுவடை செய்யப்பட்டு நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தைக்கும் வெளி மாவட்ட சந்தைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் தினமும் வெளியிடும் விலை பட்டியலின் அடிப்படையில் கந்தப்பளை பிரதேச விவசாயிகளிடம் இருந்து மரக்கறிகள் சேகரிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் ஊடாக தனிப்பட்ட ரீதியில் நுவரெலியா மரக்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு அவ் விலையை எமது மரக்கறி சேகரிப்பாளர் சங்கத்திற்கு அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அறிவிக்கப்படும் அன்றைய நாளுக்குரிய விலையின் அடிப்படையில் கந்தப்பளை விவசாயிகளின் அறுவடை செய்யக்கூடிய மரக்கறிகளை தினமும் அதிகாலையில் சேகரிக்க அதற்கான தொழிலாளர்களை ஈடுப்படுத்தப்படுகிறது.
அதேநேரத்தில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் தினமும் 09 மணிக்கு பிறகே அன்றைய நாளுக்குறிய விலை பட்டியலை வெளியிடுகிறது.
அந்த சந்தர்ப்பத்தில் நாள் விவசாயிகளின் தோட்டத்தில் அரைவாசி மரக்கறிகளை அறுவடை செய்து விடுகின்றனர். இந்த நிலையில் நுவரெலிய பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் தமக்கு அறிவித்த விலையை விட கூடுதலான விலையை பட்டியலிட்டு விடுகிறது.
இதனால் பொருளாதார மத்திய நிலையம் பட்டியலிடும் விலையை பார்வையிட்டு பின் மரக்கறி விவசாயிகள் சங்கத்தினருடனும், வர்த்தகர்களுடனும் முரண்;பாட்டில் ஈடுப்படுகின்றனர்.
அதேநேரத்தில் பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் தன்னிச்சையாக மரக்கறி விலைகளை வெளியிடுவதால் ஏற்படும் குளறுபடி காரணமாக பிரதேசத்தில் விவசாயிகளும்,மரக்கறி சேகரிப்பாளர்களும் பாரிய பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் முதலில் நுவரெலிய பொருளாதார மத்திய நிலையம் தினமும் காலை 07 மணிக்கு முன் அன்றைய நாளுக்குறிய விலையை பட்டியலிட்டு அறிவிக்க வேண்டும்.
என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
அதேபோல மரக்கறிகளின் உற்பத்தி செலவு, அறுவடை செய்ய ஈடுப்படுத்தப்படும் தொழிலாளர் சம்பல செலவு, வாகன போக்குவரத்து செலவு, என கருத்திற் கொண்டு விலை நிர்ணயம் செய்யவும் வேண்டுகோள் முன்வைக்கின்றோம்.
எனவே நுவரெலிய பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் நுவரெலியா மாவட்ட செயலாளரின் பணிப்பின் கீழ் இயங்குவதனால் இதற்காக தீர்வு விடயத்தில் மாவட்ட செயலாளர் தலையிட்டு கந்தப்பளை பிரதேச விவசாயிகளுக்கும்,மரக்கறி சேகரிப்பாளருக்கும் இடையில் தினமும் ஏற்படும் கருத்து முறன்பாடுகளுக்கும்,பாதிப்புக்களுக்கும் தீர்வை பெற்று தர வேண்டும் எனவும் சங்க தலைவர் ஆர்.தமிழ்வாணன் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே சந்தர்பத்தில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கந்தப்பளை பிரதேச விவசாயிகள் சங்கமும்,பிரதேச மரக்கறிகள் சேகரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்