இலங்கையில் தடுப்பூசி பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் 2ஆவது தடுப்பூசி செலுத்தப்படும்வரை நாடு முடக்கப்பட வேண்டும் – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவருகின்றது. எனது மாவட்டமான கண்டி மாவட்டத்திலுள்ள வைத்தியர்களுடன் நிலைமை தொடர்பில் கலந்துரையாடினேன். கண்டி மாவட்டத்துக்குள் இன்னும் ‘டெல்டா’ வரவில்லை எனவும், எனவே, 2ஆவது தடுப்பூசியையும் ஏற்றினால் கண்டி உட்பட மலைநாட்டு பகுதியை பாதுகாக்க முடியும் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டினர். எனவே, 2ஆவது தடுப்பூசியையும் விரைந்து வழங்குமாறு அரசிடம் கோருகின்றேன்.
கண்டி மாவட்டத்தில் முதலாவது தடுப்பூசியை வழங்கும்போது 2ஆவது தடுப்பூசி அவசியமில்லை என்ற ஒப்பம் வாங்கப்பட்டது. இதனால் 2ஆவது தடுப்பூசி கிடைக்குமா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
நாட்டை முழுமையாக முடக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் மாறுபட்ட செயலில் ஜனாதிபதி செயலணி ஈடுபட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் வைத்தியர்களின் கருத்துக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
2ஆவது தடுப்பூசி ஏற்றப்படும்வரை நாடு முடக்கப்பட வேண்டும். அனைவருக்கும் 2ஆவது தடுப்பூசியை வழங்கிய பின்னரே முறையாக நாடு திறக்கப்பட வேண்டும்.” – என்றார்.
