” முப்பது ஆண்டு காலத்துக்கு மேலாக சுதேச அரசாங்கத்தினால் குடியரிமை மறுக்கப்பட்ட மலையகத் தமிழ்ச்சமூகம் அந்தக் காலத்தில் தமக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை சரி செய்வதற்கும் நாட்டின் ஏனைய இன மகலகளுடன் சமன் செய்வதற்கும் சிறப்பு நடவடிக்கைத் திட்டமா ( Affirmative action ) அத்தியாவசியமானது. அது உள் நாட்டு அரச பொறிமுறை யில் மாத்திரம் அல்லாது வெளிநாட்டு உதவிகள், நனகொடை, புலமைப்பரிசில் திட்டங்களிலும் பின்பற்றப்படல் வேண்டும்.”
இவ்வாறு மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வலியுறுத்தி உள்ளார்.
நீதிக்கும் இனத்துவ ஒப்பரவுக்குமான விசேட பிரதிநிதியாக ஐக்கிய அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் இருந்து வருகை தந்திருக்கும் டிசைரீ கோர்மியர் ஸ்மித் அம்மையாருக்கும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜாவுக்கும் இடையில் இன்று (12/12/2023) மாலை நுவரெலியா கிராண்ட் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தனது வலியுறுத்தலைச் செய்துள்ளார்.
முன்னதாக நுவரெலியா பீட்ரு தோட்டத்திற்கு ஸ்மித் அம்மையாரை களப் பயணம் ஒன்றுக்கு அழைத்துச்சென்ற மலையக அரசியல் அரங்கத்தின் குழிவினர் தோட்ட ஆலயத்திற்கும், மக்கள் குடியிருப்புகளுக்கும், பீட்ரு தமிழ் வித்தியாலயத்துக்கும் அழைத்துச் சென்றிருந்தனர்.
மாலை மாலை நுவரெலியா கிராண்ட் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே மேற்கண்டவாறு தனது வலியுறுத்தலைச் செய்துள்ளார். அவரது கருத்துக்களை ஊடகங்களுக்கு பட்டியலிட்டுள்ள திலகர் பின்வருமாறு தெரிவிக்கிறார்.
1948 ஆம் ஆண்டு குடியுரிமைப் பறிப்புக்கு முன்பதாகவே 1943 ஆம் ஆண்டு இலவசக் கல்வி ‘இந்தியர்கள்’ என்ற காரணம் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டது. அதனை 40 ஆண்டுகள் கழித்தே மலையகத் தமிழ்ச் சமூகம் பெற்றது. எனினும் இன்றும் 869 தோட்டப் பாடசாலைகள் என பட்டியல்படுத்தப்பட்டே கல்வி அமைச்சின் கீழ் இயங்குகிறது.
‘பெருந்தோட்ட பாடசாலைகள் அலகு’ என கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அலகு ஒரு சிறப்பு ஏற்பாடா? அல்லது பாரபட்சமா? எனும் கேள்விக்கு இன்னும் இலங்கை அரசிடம் தெளிவான பதில் இல்லை. அது சிறப்பு ஏற்பாடாக இருந்தால் வருடாவருடம் அதற்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி, முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதே போல எத்தனைக் காலத்தில் இந்த அலகு மூடப்படும் என்பதும் சொல்லப்படவேண்டும். அதன்போதே தோட்டப்படாசலைகள் ஏனைய பாடசாலை தரத்துக்கு சமாந்தரமாக இந்த நாட்டில் கருதப்படும்.
இதே நிலைமையே சுகாதாரத்திலும் காணப்படுகிறது. சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் ‘ தோட்ட நகர சுகாதார அலகு’ வருடாந்தம் வரவு செலவு திட்டத்தில் எவ்வளவு தொகையை நிதி ஒதுக்கீடாகப் பெறுகிறது ? அதில் தோட்டப்பகுதி சுகாதாரத்திற்கு எவ்வளவு தொகை செலவழிக்கிறது என்பது வெளிப்படுத்தப்படுவதில்லை. என்னுடைய பதவிக்காலத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் 300 மில்லியன் ரூபாவில் ஒரு சதம் கூட அவர்கள் தோட்டப் பகுதி சுகாதாரத்திற்காக ஒதுக்கவில்லை என்பதை மேற்பார்வை குழுவில் அம்பலப்படுத்தி இருந்தேன்.
2018 ஆம் ஆண்டு ஆரம்ப சுகாதார கொத்தணி முறைமைக்கான கொள்கைப் பத்திரம் ஒன்றை முன்வைத்தனர். அதில் “இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டால் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் குடிபெயர்ந்த இந்திய தொழிலாளர் குடும்பங்களும் நன்மை பெறலாம்” என்றே எழுதி உள்ளனர்.
இது எதனைக் காட்டுகிறது. இன்னும் இலங்கையில் இந்த மக்களை குடிமக்களாகக் கருதாமல் இந்திய தேசத்தில் இருந்து வேலைக்கு வந்த தொழிலாளர்களாகவே கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர். இது மிக மோசமான பாரபட்சம் ஆகும். இந்திய அரசாங்கமே இதுவரை 24000 வீடுகளுக்கு நிதி ஒப்புதலை அளித்துள்ள போதும் 10 வருடங்களுக்கு மேலாகவும் 3000 வீடுகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் இந்த மக்களுக்கான காணி உரிமை அரச கொள்கையாக அல்லாது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலாக முன்னெடுக்கப்படுவதாகும்.
இதுபோல பல உதாரணங்களைக் கூற முடியும். எனவே இத்தகைய பாரபட்சமான முறைகளால் அல்லாது திட்டமிடப்பட்ட கால எல்லையில் நினைவுறுத்தக் கூடிய சிறப்பு வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுப்பதனால் மாத்தரிமே சாத்தியமாக்க முடியும். உள்நாட்டு அரசு மாத்திரமல்ல வெளிநாட்டு அரசுகள், தொண்டு நிறுவனங்கள் கூட மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் வாழும் மக்களின் நலனகருதி பழைய வேலைத்திட்டங்களையே தொடர்ச்சியாகவும் ஒரே அரச சாரா முகவர் நிறுவனங்களுடன் முன்னெடுப்பதைத் தவிர்த்து அவசியமான புதிய நிகழ்ச்சித் திட்டங்களை கண்டடைந்து கால எல்லைக்குள் அவை நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
அதே போல தகமையுடைய மலையக இளைஞர் யுவதிகளுக்கு இந்தியா, பிரித்தானியா , அமெரிக்கா போன்ற நாடுகள் கலாநிதி பட்ட கள்கைகளுக்கு புலமைப் பரிசில் வழங்க முன்வரவேண்டும். கல்வியால் தமது தடைகளை உடைத்துக் காட்டும் சமூகமாக நாங்கள் இதுவரை சாதித்து காட்டி இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.










